நடந்தது என்ன என்று எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு ரத்தம் கொடுத்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார்.
எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் முதல் தளத்தில் வைத்து, தனி அறையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, மகப்பேறு மருத்துவ தலைவர் சாந்தி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மகப்பேறுக்கான சிகிச்சையும், எச்.ஐ.வி. நோய் எதிர்ப்பு சிகிச்சையும் அளிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாத சிசிவுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுப்பதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும், குழந்தை பிறந்தவுடன் அதற்குத் தேவையான மருந்துகள் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று வராமல் 100% தடுக்கப்படும் என்றும் மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், நடந்தது என்ன என்று எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு ரத்தம் கொடுத்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “2016-ல் கொடுத்த ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருந்ததாக இப்போது கூறுகிறார்கள். ஆனால், அப்போது யாரும் இதுபற்றி தம்மிடம் தெரிவிக்கவில்லை. தம்மைத் தேடி யாரும் வரவில்லை. தொலைபேசியில் அழைக்கவுமில்லை.
ஆனால் தம்மை தொலைபேசியில் அழைத்ததாகவும், தாம் பெங்களூருவில் இருக்கிறேன் என்று கூறியதாகவும் அதிகாரிகள் சொல்கின்றனர். நான் எங்கும் செல்லவில்லை. சிவகாசியில்தான் இருந்தேன். இந்தாண்டு நவம்பர் 30ஆம் தேதி எனது உறவினருக்காக ரத்தம் கொடுத்தேன். அப்போதும் எச்.ஐ.வி. இருப்பது பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை.
வெளிநாடு செல்வதற்காக டிசம்பர் 6ஆம் தேதி மேலூரில் உடல் பரிசோதனை செய்தேன். அப்போதுதான் எச்.ஐ.வி. இருப்பது பற்றி எனக்குத் தெரியும். மீண்டும் டிசம்பர் 8ஆம் தேதி சிவகாசியில் உடல் பரிசோதனை செய்தேன். அங்கும் எனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனது ரத்தத்தை உறவினர் அல்லது வேறு யாருக்காவது செலுத்திவிட்டீர்களா? என்று டிசம்பர் 10ஆம் தேதி கேட்டேன். தமது ரத்தத்தை உறவினருக்கு செலுத்தவில்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. டிசம்பர் 25ஆம் தேதி என்னை விருதுநகருக்கு வரச் சொல்லி சென்னையில் இருந்து வந்த மருத்துவர்கள் என்னிடம் கூறினர். எனது ரத்தம் சாத்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டு விட்டது என்று மருத்துவர்கள் கூறினர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எச்.ஐ.வி. இருப்பது பற்றி தெரிந்திருந்தால் ரத்தம் கொடுத்திருக்க மாட்டேன். இப்போது என்னைத் தேடி வருபவர்கள், அப்போது ஏன் வரவில்லை?” என்று அந்த இளைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.