இந்திய சுதந்திரத்தின் அடையாளமாக இருக்கும் நமது தேசியக் கொடி குறித்த வரலாற்று பின்னணியை இப்போது தெரிந்து கொள்வோம்...
விடுதலை போராட்டக் களத்தில் முன்னிறுத்தப்பட்டதும், அகில இந்திய தேசிய காங்கிரசின் கொடியுமாக இருந்த ராட்டை உருவம் கொண்ட மூவர்ணக் கொடியே பின்னாளில் சிறிய மாற்றங்களுடன் தேசிய கொடியாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ராட்டை உருவத்திற்குப் பதில் அசோகச் சக்கரத்துடன், இந்திய அரசியல் நிர்ணய சபை இதனை அறிவித்த பின்னர் முதன் முதலாக டெல்லி செங்கோட்டையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி தேசியக் கொடி அதிகாரப்பூர்வமாக ஏற்றப்பட்டது.
இந்தியாவை ஆளும் அதிகாரம் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அடுத்த நிமிடத்தில் இருந்தே அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. ஆகையால், புதிய தேசியக் கொடியின் வடிவமைப்பு குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய அரசியல் சட்ட நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், குழு ஒன்றை அமைத்தார். பல்வேறு கருத்துகளை ஆழமாக ஆலோசித்த பின்னர் அந்த குழு பரிந்துரை செய்த தேசிய கொடி, 1947 ஜூலை 22-ம் தேதி அரசியல் சட்ட நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான தீர்மானத்தை பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டுவந்தார்.
அரசியல் நிர்ணய சபையில், தேசிய கொடியை அறிமுகம் செய்து வைத்த நேரு, அதன் நீளம், அகலம், நிறங்கள், நடுவில் இருக்கும் சக்கரம் ஆகியவை குறித்து விளக்கமளித்தார். குறிப்பிட்ட சமுதாயத்தை குறிக்கும் வகையில் கொடி இருப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்த அவர், மத அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
இந்தியாவின் பழங்கால கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் அடையாளமாக அசோகச் சக்கரம் இருப்பதாலேயே, அது தேர்வு செய்யப்பட்டதாகவும் நேரு குறிப்பிட்டார். தேசிய கொடி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளவும், சுதந்தரத்திற்காகப் போராடும் மக்களுக்கு உதவவும் இந்தியா விரும்புகிறது என்ற செய்தியையும் தேசிய கொடி தெரிவிக்கும் என்ற கருத்தையும் முன்வைத்தார் ஜவஹர்லால் நேரு.
நேருவின் தீர்மானத்தை ஆதரித்து பேசிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியவர்கள், புத்த மதத்தினர் என அனைவரும் பாதுகாப்பான அடைக்கலம் பெறுவார்கள் என்பதைத்தான் தேசிய கொடி கூறுகிறது என்று தெரிவித்தார். இப்படிப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் அரசியல் நிர்ணய சபையால் அறிவிக்கப்பட்ட தேசிய கொடியே இன்று நாடு முழுவதும் சுதந்திர சின்னமாக பட்டொளி வீசி பறக்கிறது.