தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம், 50 வருடங்களுக்கும் மேலாக, தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது தான். இந்தத் தேர்தல் சூடே ஆறாத 5 மாதங்களியே மற்றுமொரு தேர்தலுக்கு தயாரானது தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்ற அதிமுகவை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது.
இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை தீவிரமாக களமாடியுள்ளன. இந்தச்சூழலில் தான், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. மக்கள் ஆதரவு தங்களுக்குத் தான் இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க வேண்டிய நிலையில் ஆளும் தவெக இருக்கிறது. அதேசமயம், எதிர்க்கட்சியான திமுக, தொடர்ந்து இந்த தேர்தல் வெற்றி விபத்து எனக் கூறி வரும் நிலையில், அதை அழுத்தமாக பதிவு செய்ய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதிமுகவுக்கும் மீண்டெழ இந்த வெற்றி அவசியம்.
இந்தச்சூழலில் தான், வாக்கு எண்ணிக்கையின் முந்தைய நாளான இன்று அமைச்சர் செங்கோட்டையன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். குறிப்பாக, கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள், அமைச்சர் செங்கோட்டையன் இதேபோன்று பழனி கோயில் தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”தவெக சார்பில் தமிழக முதலமைச்சர் நடத்தும் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கும் நற்சான்றாகவும் அத்தாட்சியாகவும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அமையும். தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் வியக்கும் அளவிற்கு வாக்கு வித்தியாசம் இருக்கும். முதலமைச்சரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வரலாற்று நிகழ்வாக இந்த இடைத்தேர்தல் அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.