தமிழ்நாடு

”தொல்லை தாங்க முடியல” - தெரு நாய்களோடு வந்து புகார் அளித்த இந்து எழுச்சி முன்னணி

webteam

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி தெரு நாய்களோடு வந்து நகராட்சி நிர்வாகத்திடம் நூதன முறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அவற்றில் வெறி நாய்களும் சுற்றித் திரிவதாகவும் நூற்றுக்கணக்கானோர் வெறி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் மற்றும் வெறிநாய் தொல்லையை தடுக்கவும், கட நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை வெறிநாய்க்கடியில் இருந்து காப்பாற்றவும் கோரி தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி நகராட்சி அலுவலகத்திற்கு தெரு நாய்களோடு வந்தனர்.

பின்னர், தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் செயலாளர் கோட்டைச்சாமி தலைமையில் வந்த அமைப்பினர் இதுகுறித்த புகார் மனுவை தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துகுமாரிடம் வழங்கினர். மனுவைப் பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.