தமிழ்நாடு

வீதி விருது விழாவில் இந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள் என புகார் !

rajakannan

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததாக இந்து மக்கள் கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. 

சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் அரவணைப்பு மையமும், மாற்று ஊடக மையமும் இணைந்து வீதி விருது விழாவை நடத்தியுள்ளது. ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் இந்த விழா நடைபெற்றது. லயோலா கல்லூரியில் நடந்த இந்த விழாவை கல்லூரியின் கலை இலக்கியப் பிரிவு, தமிழ்நாடு அனைத்து நாட்டுப் புறக் கலைஞர்கள் அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தன்னார்வ கலைஞர்கள் சங்கம் ஆகியோரும் இணைந்து நடத்தியுள்ளனர். 

இந்நிலையில், விழாவை முன்னிட்டு லயோலா கல்லூரி வளாகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இந்து மதத்தையும், மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் அவதூறாக சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்ததாக இந்து மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  மேலும், இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் மனுவையும் அனுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மீ டு பாரத மாதா, அகண்ட பாரதக் கனவு, ஏகாதிபத்திய தாசன், ரஃபேல் டீல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் திரிசூலம், பாஜகவின் தாமரை சின்னம் உள்ளிட்டவற்றை இழிவுபடுத்தியும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன” என்று தெரிவித்துள்ளார். 

லயோலா கல்லூரி விழாவில் நடந்த விவகாரங்கள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலரிடமும், டிஜிபியிடமும் புகார் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“லயோலா கல்லூரியில் நடந்த ஓவிய காட்சியில் பாரதமாதாவை #MeToo என குறிப்பிட்டு ஓவியம் வரைந்ததை கண்டு ரத்தம் கொதிக்கிறது.  இதற்கு கல்லூரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார். 

இந்த நிகழ்ச்சி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளரிடம் பேசுகையில், “நிகழ்ச்சியில் ஓவியங்கள் வைப்பதற்கு முகிலன் என்பவர் ஸ்டால் கேட்டார். அவருக்கு ஸ்டால் கொடுத்ததை தவிர ஓவியங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று கூறினார்.