hindi name board pt
தமிழ்நாடு

மாநில நெடுஞ்சாலை பலகையில் இந்தி! இரவோடு இரவாக மறைக்கப்பட்ட எழுத்துகள்!அதிகாரிகள் பணிநீக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழியும் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

தமிழ்நாட்டில்.. குறிப்பாக அரசு அமைக்கும் வழிகாட்டிப் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் இடம்பெறுவது வழக்கம்.. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழியும் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் SH-93 சாலைப் பகுதியில் வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் வழிகள் மற்றும் தொலைவு விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

வழக்கமாக இதுபோன்ற வழிகாட்டிப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஊர்களின் பெயர்கள் இடம்பெறும் நிலையில்... இந்தப் புதிய பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் ஊர்களின் பெயர்கள் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

hindi name board

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெற்றது குறித்து சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதம் எழுந்து சர்ச்சையானது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் வழிகாட்டிப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துகள் அனைத்தும் இரவோடு இரவாக பச்சை நிற ஒட்டுத்தாள் மூலம் மறைக்கப்பட்டுள்ளன.

இதனால், தற்போது அந்தப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் மட்டுமே வெளிப்படையாகத் தெரிகின்றன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, சாத்தான்குளம் பகுதி முக்கியமான போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ளதாகவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அருகில் இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் ஊர்களின் பெயர்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் பெயர்கள் இடம்பெறச் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்... இந்தி எழுத்துகள் இடம்பெற்ற சில மணி நேரங்களிலேயே அவை ஒட்டுத்தாள் மூலம் மறைக்கப்பட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்து மீண்டும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது... வழிகாட்டிப் பலகை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மூலமாக இந்தி எழுத்துகள் மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

goverment press release

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத்துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாக இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.