தமிழ்நாடு

’மிஷன் சென்னை’ - புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய் மோட்டார்!

Sinekadhara

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொது மற்றும் தனியார் வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன், ’மிஷன் சென்னை’ என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-இன் சமூக சேவை பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன், பொது மற்றும் தனியார் போக்குவரத்து ஓட்டுநர்கள் இடையே பாதுகாப்பான வாகன இயக்க பழக்கத்தை வளர்க்கவும், சுய உடல் ஆரோக்கியம் குறித்து வலியுறுத்தவும் ‘மிஷன் சென்னை’ எனும் ஆரோக்கியம் மற்றும் சாலை பாதுகாப்பு முயற்சியை துவங்கியுள்ளது. ’உங்கள் கவனத்திற்கு’ எனும் பிரசார செய்தியுடனான இந்த திட்டத்தின்மூலம் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30,000 ஓட்டுநர்கள் பயன்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 18,000 பொது மற்றும் தனியார் ஓட்டுநர்களுக்கு இலவச பொது உடல் பரிசோதனைகளும், 12,000 பெருநிறுவன பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் உடல்ரீதியான தாக்கங்கள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் மருத்துவ பரிசோதனை வாகனத்தை அதிகாரிகள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.