தமிழ்நாடு

"வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்துவது அவசியமானது" - அமைச்சர் எ.வ.வேலு

webteam

“அரசின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்” என நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 110.90 கோடி மதிப்பில் பன்னடக்கு மருத்துவமனை கட்டடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தனர். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, "கோவை அரசு மருத்துவமனையில் 6 தளங்களுடைய கட்டிட பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் மருத்துவமனை கட்ட வேண்டும் என்கின்ற உத்தரவை அடுத்து, நானும் பொறுப்பு அமைச்சர் அவர்களும் ஆய்வு மேற்கொண்டு நாங்கள் திட்டமிட்டுப்படி பணிகள் வேகமாக விரைவாக நடைபெற்று வருகிறது. 2023 மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் முழுவதுமாக முடிவடையும். கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இறுதி பூச்சு வேலை மட்டும் உள்ளது. முதல்வர் கைகளால் இந்த மருத்துவமனை கட்டிடம் திறக்கப்படும்.

அவசர நோயாளிகள் சிகிச்சை பெற தனி பிரிவு செயல்பட உள்ளது. இந்த கட்டிடம் மேட்டு பகுதியில் உள்ளது. நீர் உள்ளே வருகிறது, தேங்குகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதலாக 10 கோடி ரூபாய் பணம் பெற்று அந்த சாலைகள் அனைத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

அன்னூர் மற்றும் வாரப்பட்டி பகுதிகளில் தொழில் பூங்கா நிலங்கள் எடுத்ததைப் பற்றி கேட்டதற்கு, ''பொதுவாக அரசு பல திட்டங்களை நிறைவேற்றுவதற்கவும் வளர்ச்சியை நோக்கி புதிதாக செயல்படுத்துவதாகவும் இருந்தாலும் சிப்காட் அமைப்பதாலும் இருந்தாலும் சரி நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியமானது. சாலைகள் போடுவது எதற்காக? பொதுமக்களுக்காக தான். அனைவரும் பயனாளிகள் தான். அதற்காக தான் விரிவுபடுத்துகிறோம். அரசின் திட்டங்களை நிறைவேற்றும்போது நிலங்களை கையகப்படுத்தித்தான் தான் ஆக வேண்டும். இந்த பிரச்சனை அமைச்சர் தங்கம் தென்னரசுடன் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.