madras high court
madras high court pt desk
தமிழ்நாடு

EPS-க்கு எதிரான முறைகேடு வழக்கு-மனுவை வாபஸ் பெற அனுமதி கோரிய ஆர்.எஸ்.பாரதி! விசாரணையில் நடந்ததென்ன?

webteam

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்தும்படி 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தது.

EPS

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, “எடப்பாடி பழனிசாமி மீது குற்றமில்லை என கடந்த 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை. மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “புகார் மீதான நடவடிக்கையில் வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

EPS

எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, “மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை படிக்காமல் சிபிஐ விசாரணைக்கு முன்பு உத்தரவிடப்பட்டது. அதனால், 2018 ஆம் ஆண்டு ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடிக்க வேண்டும். பாரதி மனுவை திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது” என்றும் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.