ஒகி புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒகி புயலை தேசியப் பேரிடராக அறிவிப்பது பற்றிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இழப்பீடு வழங்குவது குறித்து எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நேற்று கூறியதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவித்து நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.