கேன் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மூலம் நெருக்கடி கொடுத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடக்கோரி, சிவமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோத ஆலைகளை மூட உத்தரவிட்ட நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது. அத்துடன் நடவடிக்கை எடுக்காத ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்படும் கேன் குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டன. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் 682 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து குடிநீர் ஆலைகள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். மேலும், போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதி அளித்தது வியப்பை அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினர்.