நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 2016-17-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று கூறியிருந்தார். அந்த அறிக்கையையும், 2015-ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் நடத்திய சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களுக்குடன் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்பிட்டு மதிப்பீடு செய்தனர். அப்போது, புலி படத்தில் நடிப்பதற்கு 15 கோடி ரூபாய் பெற்றதை, வருமான வரிக்கணக்கில் காட்டாமல் நடிகர் விஜய் மறைத்துள்ளதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து நடிகர் விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து வருமான வரித்துறை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அபராத தொகை கட்ட இடைக்கால தடை விதித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடைபெற்றது.
விஜய் தரப்பில் அபராதம் விதித்து 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
அப்போது வருமான வரித்துறை சார்பில் இந்த அபராத தொகையை காலதாமதமாக விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறுவது சரியல்லை. அவர்கள் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் தரப்பில் அணுகினார்கள். தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னர், இந்த அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது. இதில் தவறு எதுவும் இல்லை என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புலிப் படத்தின் வருமானத்தை மறைத்ததால் வரிமான வரித்துறை 1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. இது எந்த விதத்திலும் விதிமீறல் இல்லை. எனவே, வரிமான வரித்துறைக்கு 1.5 கோடி அபராதத்தை விஜய் செலுத்த வேண்டும் என அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஏற்கனவே கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை, அவரின் கடைசி படமான ஜனநாயகன் பட வெளியீட்டு விவகாரம் போன்றவற்றை எதிர்கொண்டு வரும் நிலையில், இன்று வருமான வரித்துறையின் அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது விஜய்க்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.