புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சேகர்ரெட்டி உள்பட 4 பேர் 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை ரத்துசெய்யகோரி சேகர்ரெட்டி, திண்டுக்கல் ரத்னம் உள்பட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து வந்தது, இவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் யார், வங்கி அதிகாரிகள் யாரும் விசாரிக்கப்படவில்லையா என நீதிபதிகள் சிபிஐயிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். வருகின்ற 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.