ஜெகன் மூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றம் pt web
தமிழ்நாடு

“கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா?” - ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

காதல் விவகாரத்திலும் சிறுவனைக் கடத்திய புகாரிலும் காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர் VM சுப்பையா

பிரச்னை என்ன?

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு பெண்ணை தேடியும் தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி மற்றும் சிலருக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், பெண்ணின் தந்தை உள்பட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகன்மூத்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், ஒரு கட்சியின் தலைவராகவும் எம்.எல்.ஏ.வாகவுமுள்ள ஜெகன்மூர்த்தியை கைது செய்ய வஜ்ரா வாகனம் கொண்டு வரப்பட்டு 200 போலீசாரும் திரண்டதால், அப்பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவியது என வாதிட்டார்.

ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜர்

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், “வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருக்கிறார். கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார். இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபி-க்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

PoovaiJaganMoorthy

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக இன்று பிற்பகல் நேரில் ஆஜராகும்படி ஜெகன்மூர்த்திக்கும், ஏடிஜிபி- ஜெயராமுக்கும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். ஆஜராக முன்வராவிட்டால் ஏடிஜிபி-யை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிற்பகல் தள்ளிவைத்து உத்தரவிட்டார். வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் நீதிபதி பி.வேல்முருகன் முன் நேரில் ஆஜராகினர்.

“கூலிப்படையினர் யாரும் கடத்தலில் ஈடுபடுத்தப்படவில்லை. கூலிப்படையினரை ஈடுபடுத்தியதாக காவல் துறை கூறுவது தவறு. இந்தக் கடத்தலில் ஜெகன் மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை. காவல் துறையில் உள்ள பிரச்னை காரணமாக ஒரு அதிகாரியை இழுக்க முயற்சிக்கின்றனர்” என வாதிடப்பட்டது.

கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா?

70 ஆயிரம் பேர் அவர்களின் குரலாக சட்டமன்றத்தில் பேசதான் வாக்களித்தனர். ஆனால், அதை மறந்து கட்ட பஞ்சாயத்து நடத்தி உள்ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா?

காவல்துறையினர் தரப்பில், “வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத்குமார், டேவிட், வனராஜ் உள்ளிட்டோர் தனுஷ் வீட்டுக்கு சென்று அவரது சகோதரரை கடத்தியுள்ளனர். அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகளும் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஜெகன் மூர்த்தியிடம் ஏடிஜிபி பேசியிருக்கிறார். ஜெகன்மூர்த்திக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது. இதுசம்பந்தமாக வழக்கறிஞர் சரத் குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஏடிஜிபியிடமும், அவரது டிரைவர்களும் விசாரிக்கப்படுவர்” தெரிவிக்கப்பட்டது.

PuratchiBharatham

இதையடுத்து, நீதிபதி, ‘எந்த தொகுதி எம்.எல்.ஏ. நீங்கள்? எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள்?’ என ஜெகன் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெகன் மூர்த்தி, கே வி குப்பம் தொகுதியில் இருந்து 70 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தெரிவித்தார். 70 ஆயிரம் பேர் அவர்களின் குரலாக சட்டமன்றத்தில் பேசதான் வாக்களித்தனர். ஆனால், அதை மறந்து கட்ட பஞ்சாயத்து நடத்தி உள்ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா? என நீதிபதி வேல்முருகன், ஜெகன் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பினார்.

இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டது உங்கள் கட்சி விவகாரமா?

“இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டது உங்கள் கட்சி விவகாரமா? நீங்கள் சாதாரண மனிதர் அல்ல. மக்கள் பிரதிநிதி. ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொகுதிக்கும் நீங்கள்தான் எம்.எல்.ஏ” என தெரிவித்த நீதிபதி, “நீங்களே காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்” எனவும் கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

“எம்.எல்.ஏ. என்ற போர்வையை பயன்படுத்தி, பதவியை துஷ்பிரயோகம் செய்ய கூடாது. எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர கட்ட பஞ்சாயத்து செய்ய கூடாது. கட்டப்பஞ்சாயத்து செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” கேள்வி எழுப்பிய நீதிபதி, காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் உத்தரவிட்டார்.

“போலீசாரை தடுக்கும் வகையில் ஆட்களை சேர்த்து செயல்பட்டால் வேறு மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்த நீதிபதி, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காகத்தான் உங்களை கைது செய்ய உத்தரவிட வில்லை என்றும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தவறு செய்யும் அதிகாரிகளுக்கு, இது ஒரு செய்தி

உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்களது பெயரை தவறாக பயன்படுத்தினாலும் குற்றம் தான் எனக் குறிப்பிட்ட நீதிபதி, வாக்களித்த மக்களை ஏமாற்ற கூடாது என்றும் விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டு, முன் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமன்

அதேசமயம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யவும் உத்தரவிட்டார். ஏடிஜிபி கைது செய்யும் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தினை முன் வைத்த போது, “எம்.எல்.ஏ.வையும், ஏடிஜிபியையும் சமமாக கருத முடியாது. வாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க எம்.எல்.ஏ. வுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியருக்கு இந்த சலுகை வழங்க முடியாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு, இது ஒரு செய்தியை சொல்லட்டும்” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.