தியாகராயர் நகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சில்க்ஸ் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தி.நகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், 2007 ஆம் ஆண்டுக்கு பின் தியாகராயர் நகரில் அனுமதியின்றி ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு பொறுப்பான வீட்டுவசதி துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 2007-க்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைபடுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாகவும், 2007-க்கு பின்னுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.