தமிழ்நாடு

தமிழகத்தில் மதுபானம் வாங்க ஆதார் : உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் மதுபானம் வாங்க ஆதார் : உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"டாஸ்மாக் கடையுடன் சேர்ந்துள்ள மதுபானக் கூடத்தில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யவும்,காலி பாட்டில்களை சேகரிக்கவும் தனி நபர்களுக்கு உரிமம் வழங்கப்படும். தற்போது இந்த உரிமம் வழங்குவதற்கான டெண்டர் தொடர்பாக மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பிப்ரவரி 21ல் அறிவிப்பாணையை வெளியிட்டார். அதில்,உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் 22 முதல் 28 வரை விநியோகிக்கப்படும் என்றும் மார்ச் 1 ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் விதிகளில்,2 கோடி வரையிலான டெண்டருக்கு 15 நாள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், இந்த டாஸ்மாக் மதுபான கூடம் தொடர்பான டெண்டருக்கு அந்த கால அவகாசம் வழங்கப்படவில்லை.இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில் குறைந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவ்வாறு அதிகாரிகள் கால அவகாசத்தை குறைப்பதாக இருந்தால் அதனை எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நடவடிக்கை இந்த அறிவிப்பில் மேற்கொள்ளப்படவில்லை. விண்ணப்பங்கள் இல்லை எனக்கூறப்பட்ட நிலையில், டாஸ்மாக் இணையத்தளத்தில் அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும் இயலவில்லை.ஆகவே, மதுரையில் மதுபானக்கூடங்களுக்கான டெண்டர் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும்" என  அந்த மனுவில் கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. அதோடு 2 ஆண்டுகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள்,"தமிழகத்தில் பெரும்பாலான  குற்றச்சம்பவங்கள் பார்களிலேயே நடக்கின்றன. பார்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களும், இழப்புகளும் அதிகரிக்கின்றன. மாணவ, மாணவிகள் மதுவுக்கு அடிமையாவது தமிழகத்தில் அதிகரித்துள்ளது என தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து, தமிழகத்தில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? டாஸ்மாக் கடையின் நேரத்தை பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஏன் மாற்றக்கூடாது? தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது? பார்களுக்கான டெண்டர் அறிவிப்பு 2 ஆண்டுகளுக்கென வெளியானது ஏன்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.