முதல் மரியாதை முகநூல்
தமிழ்நாடு

கோவிலில் முதல் மரியாதை... நிறுத்த அறிவுறுத்திய உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

திருவிழா காலங்களில் கோயிலில் யாருக்கு முதல் மரியாதை? என்கிற விஷயம் பல காலமாக நடமுறையில் இருக்கு ஒன்று. யாருக்கு முதல் மரியாதை என்கிற விஷயத்தால் நடந்த பிரச்னைகள் பலவற்றை திரைப்படங்களிலும் பார்த்திருப்போம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை செய்திகளாக படித்திருப்போம். அந்தவகையில், ஈரோட்டில் முதல்மரியாதை தங்களுக்குதான் வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இதற்கு நீதிபதி அளித்த தீர்ப்பு என்ன? பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம் பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் மகா குண்டம் விழாவில் முதல் மரியாதை வழங்கக் கோரி, தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், 'கோவில் வழக்கப்படி, தன் குடும்பத்தினர் தலைமையில், சுவாமி ஊர்வலம் நடத்தப்படும். தங்கள் குடும்பத்தினருக்கு தான் முதல் மரியாதை வழங்கப்படும். அதன்படி, தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தெரிவித்த நீதிபதி வெங்கடேஷ், “ பல கோயில் விழாக்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணம் முதல்மரியாதைதான். மேலும், கோயில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளைவிடத் தங்களை மேலானவர்களாகக் காட்ட முயற்சிக்கின்றனர்.

இது, விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது. இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது, கடவுள் முன் அனைவரும் சமம். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும்.” என தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கை முடித்து வைத்தார்.