சீமான் - விஜயலட்சுமி web
தமிழ்நாடு

’விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது’.. சீமான் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அதற்கு எதிராக சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

PT WEB

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சீமான் முன்வைத்த கோரிக்கை..

விஜயலட்சுமி கொடுத்த வழக்கை எதிர்த்து சீமான் அளித்த மனுத்தாக்கலில், கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை ஏற்கனவே முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

Seeman | NTK

இந்நிலையில் இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி  நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்பட்வில்லை.

இந்த சூழலில் மீண்டும் இந்த வழக்கு நீதிபதி  ஜி.கே.இளந்திரையன்  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விஜயலட்சுமி வழக்கை ரத்துசெய்ய முடியாது..

இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர்   ஜான்சத்தியன் ஆஜராகி, ஏற்கனவே 2011ஆம் ஆண்டு வழங்கிய புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023-ல் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தற்போது தூண்டுதலின் பேரில்தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதாகும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விஜயலட்சுமி, சீமான்

இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு என்றும், ஏற்கனவே இது குறித்து நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும், அதை சீல் செய்யப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

காவல்துறையிடம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி நடிகை விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் 2011ஆம் ஆண்டு தான் இந்த விவகாரம் வெளிவந்ததாகவும், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது எனக்கூறிய நீதிபதி, விஜயலட்சுமி வழக்கை தள்ளுபடி செய்யக் கூறி கொடுக்கப்பட்ட சீமான் வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும் இவ்வழக்கு மீதான விசாரணையை பன்னிரண்டு வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உடன் இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.