தமிழ்நாடு

“வெற்று காகிதத்தில் கைரேகை வாங்கி சொத்தை அபகரித்துவிட்டார்” - பேத்தி மீது பாட்டி புகார்

webteam

வெற்று காதிதத்தில் கைரேகை பெற்று சொத்துகளை பேத்தி அபகரித்ததாக அவரது பாட்டி தொடர்ந்த வழக்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி இறுதி முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாலம்மாள் என்ற 95 வயது மூதாட்டியிடம், அவரது மகள் வழி முதல் பேத்தியான லோகநாயகி, வெற்று காகிதத்தில் கைவிரல் ரேகைகளை வாங்கி, சொத்துகளை தன் பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தெரிந்தபின் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்த சாலம்மாள், தன் சொத்துகளை மகள் பெயரிலும், இரண்டாவது பேத்தி பெயரிலும் எழுதி வைத்துள்ளார்.

இதன்பின்னர் லோகநாயகி தொடர்ந்த சிவில் வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், சாலம்மாள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கும் தள்ளுபடியானது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில், லோகநாயகி அபகரித்த சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் சாலம்மாள் புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த பிப்ரவரியில் விசாரணை நடத்திய ஆட்சியர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் சாலம்மாள் புகார் அளித்தார்.

அதன்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தன் புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சாலம்மாள் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூதாட்டி சாலம்மாள் புகாரில் இரு தரப்பினரையும் அழைத்து, அவர்களின் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளித்து, 4 வாரத்தில் சட்டப்படி இறுதி முடிவெடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.