தமிழ்நாடு

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

webteam

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எழுவரில் ஒருவரான நளினி, தன் மகள் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாத பரோல் கோரி பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் விசாரித்தனர். கடந்த ஜூலை 5ஆம் தேதி இந்த வழக்கில் காவல்துறை பாதுகாப்புடன், வேலூர் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட நளினி தானே ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் ஒரு மாத பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில், ஜூலை 25 வேலூர் சிறையிலிருந்து நளினி பரோலில் வெளியில் வந்தார். 

வேலூர் சாத்துவாச்சாரியில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் நளினி, அதற்கான ஏற்பாடுகள் முடிவடையாத நிலையில் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மனு அளித்த நிலையில், அவரது கோரிக்கை ஆகஸ்ட் 13ல் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து,  பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் அளியுங்கள் என தமிழக அரசுக்கும் சிறைத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.