நெல்லையில் சேதமடைந்த நம்பியாறு பாலத்தின் உறுதித்தன்மை குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளாட்சி நிர்வாகத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த ராகவன் உயர்நீதிமன்ற மரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “நெல்லை நம்பியாறு ஆற்றின் குறுக்கே ரூ.40 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. 5 மாதங்களில் கட்டப்பட்ட இப்பாலம், தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையில் மேம்பாலம் இரண்டாக உடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு உறுதி தன்மையுடன் புதிய பாலம் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, பாலத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளாட்சி நிர்வாகத்துறை செயலருக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.