தமிழ்நாடு

லெட்சுமி யானையின் பரிதாபம்: தமிழ்நாடா? கர்நாடகாவா? எது நிரந்தரம்..!

லெட்சுமி யானையின் பரிதாபம்: தமிழ்நாடா? கர்நாடகாவா? எது நிரந்தரம்..!

webteam

யானை லெட்சுமியை வழக்கு முடியும் வரை ராஜபாளையத்தில் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக்செல்வம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “பழனியைச் சேர்ந்த சவுந்தராஜன் என்பவர் லெட்சுமி என்ற யானையை வளர்த்து வந்தார். இந்த யானையை வைத்து அவர் பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் பணம் வசூல் செய்து வந்தார். பாதங்கள் அழுகி யானையால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து  வன பாதுகாவலரிடம் புகார் அளித்தோம். வன அதிகாரிகள் யானையை மீட்டனர். தற்போது யானை ராஜபாளையத்தில் உள்ள விலங்குகள் கவனிப்பு அறக்கட்டளையின் கவனிப்பில் உள்ளது.
 
இந்நிலையில் யானை லெட்சுமியை பெங்களூரில் உள்ள தனியார் வனவிலங்கு மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்ப தமிழக அரசு அனுமதி வழங்கியது. அந்த நிறுவனம் யானைகளை வைத்து பணம் சம்பாதித்து வருகிறது. எனவே லெட்சுமி யானையை பெங்களூருக்கு அனுப்பக்கூடாது. தமிழக வனத்துறையினரே பராமரிக்க உத்தரவிட வேண்டும்"
 எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீவில்லிப்புதூர் வன பாதுகாவலர் அசோக்குமார் ஆஜராகி விளக்கமளித்தார். அதில், "லெட்சுமி யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நலம் தேறி வருகிறது. யானையின் உடலில் இருந்த மைக்ரோ சிப்பை பொருத்தவரை, அது கேரளாவை சேர்ந்த இந்திரா என்ற யானைக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறினார். 

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், லெட்சுமி யானையின் தற்போதைய உடல் நலம் குறித்து ஸ்ரீவில்லிப்புதூர் வனக்காவலர் மற்றும் மாவட்ட வளர்ப்பு யானைகள் பராமரிப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு முடியும் வரை யானை லெட்சுமி ராஜபாளையம் விலங்குகள் கவனிப்பு மையத்தில் இருக்க வேண்டும் எனவும், மையத்தினர் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறினர். மேலும் யானையின் பராமரிப்பு தொடர்பாக மாநில தலைமை வன பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.