தமிழ்நாடு

சிலைக் கடத்தல் விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

சிலைக் கடத்தல் விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

webteam

சிலைக் கடத்தல் தொடர்பாக தன்னிடம் விசாரணை செய்ய தடைக் கோரி கோயில் அலுவலர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருச்சி அருள்மிகு தருகவனேஸ்வரர் கோயிலின் 3 சிலைகள் காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தொல்லை தருவதாக, திருச்சி வயலூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்சி அருள்மிகு தருகவனேஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். கோயில் திருவிழாவின் போது சிலைகள் கணக்கெடுக்கப்பட்ட போது 3 சிலைகள் மாயமானது தெரியவந்தது.

இது தொடர்பாக ஜீயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். எனது புகாரின் பேரில் கோயில் ஊழியர்கள் 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் என்ன தொந்தரவு செய்கின்றனர். எனவே போலீஸார் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரர் விசாரணைக்கு தான் அழைக்கப்பட்டார். அவரை போலீஸார் தொந்தரவு செய்யவில்லை” என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.