தமிழ்நாடு

காணாமல்போன கோயில் சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

காணாமல்போன கோயில் சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

kaleelrahman

காணாமல்போன கோயில் சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  கோயில்களின் சொத்துக்கள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போயுள்ளதாகவும்,  கோயில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் கூறி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வெங்கட்ராமன், சிலைக்கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், கடந்த ஆட்சியில் இந்த வழக்கில் அறநிலையத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகள், நகைகள் காணாமல் போகவில்லை என கூறி, திருட்டுகள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அறநிலையத்துறை ஆணையருக்கு ஆவணங்கள், சிலைகள், நகைகள் மாயம் குறித்து மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரர் சில தீவிரமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சிலைகள், நகைகள் எங்கிருந்து காணாமல் போயின என்பதை கண்டறிய வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகையில் திட்டம் வகுக்கவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினர்.

இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், மனுதாரர் குற்றச்சாட்டுக்களை தீவிரமாக உள்ளதால், ஏற்கெனவே தாக்கல் செய்த பதில்மனுவில் எடுத்துள்ள நிலைபாட்டை மறுபரிசீலனை செய்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். புராதன  கோயில்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், காணாமல் போன சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.