Madras High court pt desk
தமிழ்நாடு

போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்ட நோக்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும் - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதால், போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

உதகையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காணமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த போது அந்த சிறுமி விஜயகுமார் என்ற இளைஞருடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விஜயகுமார் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, விஜயகுமாரும், தானும் காதலித்து வந்ததாகவும், தனது பெற்றோருக்கு இது தெரியவந்ததை அடுத்து வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதால் விஜயகுமாருடன் சென்றதாக சிறுமி கூறியுள்ளார்.

Pocso case

வழக்கை விசாரித்த உதகை மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ வழக்கிலிருந்து இளைஞரை விடுதலை செய்தது. ஆனால், கடத்தல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விஜயகுமார் மற்றும் காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதை தடுக்க வேண்டுமென்று விஜயகுமார் நினைத்திருந்தால் போலீசிடமோ அல்லது சமூக நலத்துறைக்கோ புகாரளித்திருக்க வேண்டுமென கூறியுள்ளார்.

வெளியூரில் தங்கியிருந்த போது சிறுமியுடன் உடலுறவில் இருந்த நிலையில், பின்னர் போக்சோ வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக திருமணம் செய்து கொண்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொண்டதால் வழக்கை ரத்து செய்தால் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்ட நோக்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். கடத்தல் வழக்கில் விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை உறுதி செய்த நீதிபதி, போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.