8 வழிச்சாலை வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைத்து விடலாமே என நீதிபதிகள் கோபமாக தெரிவித்துள்ளனர்.
8 வழிச்சாலை வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மரம் வெட்டிய புகாரில் ஜாமீன் பெற்ற அரசு அதிகாரிகளின் ஜாமீனை நிராகரிக்க கோரி, காவல்துறை தாக்கல் செய்த மனுவை பாப்பிரெட்டிப்பட்டி நீதிபதி ஏன் காலம் தாழ்த்தி வருகிறார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து காலம் தாழ்த்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.
பின்னர் தருமபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள சக்திவேல், சுந்தரம் ஆகியோரை கைது செய்ய காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, அரசிடம் இருந்து வலுக்கட்டாயமாக தகவல்களை பெற வேண்டி உள்ளது.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்கு வருவதை தவிர வேறு ஏதும் செய்வதில்லை என நீதிபதிகள் கூறினர். சாலை அமைய உள்ள பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் சிலரை பாதுகாக்க தமிழக அரசு முயற்சிப்பதாக தெரிகிறது என்றும் நீதிபதிகள் சாடினர். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.