2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டது. அப்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட பெரியகருப்பன் 83,364 வாக்குகளை பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 365 வாக்குகளை பெற்றார். இதனையடுத்து ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு வாக்கில் எம் எல் ஏ பதவியை இழந்த பெரியகருப்பன் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு ஒன்று வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதி எண் 50-க்கு தவறுதலாக சென்று விட்டது. அந்த வாக்கை சிவகங்கை அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்ட தொகுதி 185-ல் சேர்க்க வேண்டும் என திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் தபால் வாக்குகளை மீட்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்பான காணொளி காட்சிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மே 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில் மே 11 ஆம் தேதி (நேற்று ) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "தபால் வாக்கு மாற்றப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாகப் பதிலளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் ஒருவரின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”தபால் வாக்கு மாற்றப்பட்டது குறித்து எந்த புகாரும் வரவில்லை. தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு முன் தபால் வாக்குகள் கிடைத்தால் மட்டுமே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின் காலதாமதமாக தபால் வாக்கு கிடைத்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என தெளிவாக விதிகளில் கூறப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியுமே தவிர, இதுபோல 'ரிட்' வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இதைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு தொகுதியில் எண்ணப் பட்ட தபால் வாக்கை, வேறு தொகுதிக்கு அனுப்ப முடியாது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கை பெற்று, மறு எண்ணிக்கை நடத்தக்கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. வழக்கமாக தபால் வாக்குகள், தொகுதி எண், பெயருடன் தான் அனுப்பப்படுகின்றன. அதனால் தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றும் கூறியிருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இன்று (மே 12) நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக வேட்பாளருக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நாளை தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.