மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்களின் சமாதிகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்களின் சமாதிகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு அமைக்கப்பட்ட சமாதிகள் கடலோர ஒழுங்குமுறை பாதுகாப்புக்கு புறம்பாக அமைந்துள்ளதாக அவர் தமது மனுவில் கூறியிருந்தார். சமாதியை கோட்டூர்புரம் பகுதியில் அமைந்துள்ள காந்தி மண்டபம் அருகில் அமைக்கலாம் என மனுவில் கூறப்பட்டிருந்தது. மத்திய அரசின் விதிகளின்படி கடற்கரை பகுதியில் கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கோரியது. இதையேற்று இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.