தமிழ்நாடு

பொதுத் தேர்வு முடிவு வெளியீடு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

webteam

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் வெளியிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளங்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக வெளியிடும்போது, குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காகவும், தோல்வி அடைந்ததற்காகவும் மாணவர்களில் சிலர், தற்கொலை செய்துக் கொள்வதாகவும், இதை தடுக்க தேர்வு முடிவை வெளியிடும் முறைகளில் மாற்றம் கொண்டு வர கோரி செந்தில் குமார் என்பவர் தமிழக அரசிடம் மனு அளித்துள்ளார்.

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மாணவர்களை, பெற்றோருடன் பள்ளிக்கு வரவழைத்து, பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கொடுத்த மனுவை, தமிழக அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை என கூறி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை அடுத்து வழக்கு தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.