கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதியில் குளியல் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளி நீலு குமாரி குப்தா கைது செய்யப்பட்டார். மேலும், மற்ற குளியல் அறைகளில் கேமரா உள்ளதா என 100 பெண் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே லாளிக்கல் என்ற இடத்தில் பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் மொத்தம் 11 பிளாக்குகள் உள்ளன. அதில் தற்போது 9 பிளாக்குகளில் பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இதில் 4வது பிளாக்கில் உள்ள குளியல் அறையில் நீலு குமாரி குப்தா என்பவர் ரகசியக் கேமராவைப் பொருத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை அங்கு தங்கியிருந்த 3 வட மாநில தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தொழிற்சாலை நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய போராடி வந்த தொழிலாளர்களிடம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பேச்சுவார்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த சம்பவத்தில் ரகசிய கேமரா வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒடிசாவை சேர்ந்த நீலு குமாரி குப்தா என்ற 23 வயது இளம் பெண்ணை உத்தனபள்ளி காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் ஆண் நண்பரான ஒரிசாவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இதற்கு உடந்தையாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சந்தோஷை தேடி காவல்துறையினர் பெங்களூர் சென்றுள்ளனர்.
அதேபோல அந்த விடுதியில் உள்ள மற்ற குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் ஏதேனும் உள்ளதா என பெண் தொழிலாளர்களுக்கு சந்தேகம் தொடர்ந்து இருந்து வருவதால் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி பகுதிகளை சேர்ந்த நூறு பெண் போலீசார் 10 டீம்களாக பிரிந்து மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு ஒவ்வொரு குளியல் அறையிலும் தீவிரமாக சோதனை நடத்தினர். அதேபோல தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பிலும் டெல்லியில் இருந்து வரும் டிடெக்டிவ் டீம்களும் ரகசிய கேமராக்கள் குறித்து சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விடுதியில் தங்கி இருந்த தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை அச்சத்தின் காரணமாக அவர்களின் பெற்றோர் தொழிற்சாலைக்கு வந்து அவர்களை வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அடிக்கடி இப்படி பெண்கள் உபயோகிக்கும் குளியல் அறைகளிலும் தனியார் தங்கும் விடுதிகளிலும் ரகசிய கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் தாங்கள் வெளியே சென்று தங்கும் இடங்களில் முதலில் அங்கு ஏதேனும் ரகிய கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்று சோதித்துப்பார்த்துவிட்டு அந்த அறையை உபயோகிப்பது நல்லது. குளியலறையில் தேவையில்லாத பொருள்கள் இருந்தால் அவற்றை சோதிக்க வேண்டும். டெக்னிக்களாக கண்டுபிடிக்க வேண்டுமென்றால், செல்போனில் உள்ள ரகசிய கேமராவை கண்டுபிடிக்கும் ஆப்களை இன்ஸ்டால் செய்து, அதன் மூலமாக கண்டுபிடிக்கலாம். அதேபோல இதுபோன்ற விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் அவ்வப்போது தங்களது அறைகளையும் குளியலறைகளையும் சோதனை செய்து பார்ப்பது நல்லது என்றும் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறையினரின் உதவியை நாட வேண்டும் என்றும் கூறுகின்றனர் சைபர் கிரைம் நிபுனர்கள்.