ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்காக ‘மாநில குழந்தை நலன் கொள்கை’ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதில் சமூக நலத்துறையின் கீழ்ப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் கீழ் திருமண நிதியுதவி திட்டம், அம்மா இருசக்கர வாகனத்திட்டம், மகளிர் விடுதிகள் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.
அத்துடன் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி, சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க அரசு முயற்சி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக வகுக்கப்பட்டு வரும், தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக சமூகப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.173.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.