தமிழ்நாடு

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

webteam

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுகுறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடிக்கிறது. இதன் காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ‌வேலூர், ஈரோடு, நீலகிரி, கரூர் ‌மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட தமிழகத்தில் பரவலாகவும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. நாகை, வேளாங்கண்ணி, திட்டச்சேரி, திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் சிதம்பரம், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. வேலூர், ஆம்பூர், தேனி மாவட்டம் பெரியகுளம், கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. புதுச்சேரி காலப்பேட், திருப்புவனை, தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.