விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை pt web
தமிழ்நாடு

கடுமையான இன்னலில் விழுப்புரம் மாவட்டம்.. கொட்டி தீர்த்த 50 செமீ மழை.. வெச்சு செய்த ஃபெஞ்சல் புயல்!

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கேஷ்வர்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுதும், விடிய விடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும், புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் தரையில் 6 மணி நேரமாக நகராமல் நிலைகொண்டுள்ளது.

குறிப்பாக கடலூருக்கு அருகே 30 கி்மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, புதுச்சேரியில் குறைவான நேரத்தில் அதீத கனமழை பெய்தது. நேற்று மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத்தொடங்கிய புயல், உட்புற தமிழகத்தை நோக்கி நகரவில்லை என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது.

புயல்

இதனால் புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் அதீத கனமழை என்பது நேற்று மாலை முதலே பதிவாகிக் கொண்டிருக்கிறது. விழுப்புரத்தின் மேற்குப் பகுதிகளில் வரக்கூடிய நேரங்களில் மலையின் தாக்கம் அதிகரிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டங்களிலும் பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ள நிலையில், அடுத்த 8 மணி நேரத்திற்கு தொடர் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சூரை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செமீக்கும் மேல் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தேவனூர் வெள்ளம்புத்தூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வீரபாண்டி, ஒட்டம்பட்டு, அருணாபுரம் உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து வெள்ளம்புத்தூர் வழியாக வெளியேறுவதால் பல்வேறு நீர்நிலைகள் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது,

குழந்தையை பக்கெட்டில் வைத்து மீட்ட புதிய தலைமுறை செய்தியாளர் காமராஜ்

பல்வேறு நீர்நிலைகள் உடைந்து விவசாய நிலத்தில் அதிக அளவு தண்ணீர் வருவதால் அதன் வாய்க்கால்கள் உடைந்து ரயில்வே சுரங்க பாதையில் பாதையில் அதிக அளவு தேங்கி நிற்பதால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது,.

விழுப்புரம் மாவட்டம் பாண்டியன் நகரில் ஆறு மாத குழந்தையை பக்கெட்டில் வைத்து புதிய தலைமுறை செய்தியாளர் மீட்ட நிலையில் அப்பகுதிக்கு மீட்புக் குழுவினரும் விரைந்துள்ளனர். பாண்டியன் நகர் பகுதி தாழ்வான பகுதி என்பதாலும், எப்போதும் இல்லாத அளவிற்கு மழை பெய்ததாலும் அப்பகுதி முழுவதுமே நீரில் மூழ்கியுள்ளது.