தமிழ்நாடு

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு ‌வாய்ப்பு

webteam

‌தமிழகத்தின் உட்பகுதிகளில் மேல் அடுக்க‌ சுழற்சி நிலவுவதால் கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு ‌வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுகுறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்தது. இதன் காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ‌வேலூர், ஈரோடு, நீலகிரி, கரூர் ‌மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் பரவலாக கனமழையும், மிக கனமழை பெய்தது. 

இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தி‌ன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வட தமிழகத்தில் பரவலாகவும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார். சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும் ‌தமிழகத்தின் உட்பகுதிகளில் மேல் அடுக்க‌ சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் எனவும் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தி‌ன் தெரிவித்தார். 

இதனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மழை படிப்படியாக குறையும் எனவும் பாலச்சந்தி‌ன் தெரிவித்தார்.