ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக கலவகுண்டா அணை நிரம்பி வெளியேறும் 2500 கனஅடி உபரி நீரால், பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை நிரம்பி சுமார் 2500 கனஅடி நீர் பொன்னையாற்றில் வெளியேறி வருகிறது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பொன்னை தரைபாலம் வழியாக சித்தூரில் இருந்து திருத்தணி செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் முன்னெச்சரிக்கையாக காலை 10.00 மணி முதல் நிறுத்தப்பட்டு பின்னர் 2.00 மணி அளவில் அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை காண பொதுமக்கள் அதிகம் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.