தமிழ்நாட்டில் அடுத்த 3 நாள்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 31ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக, மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டி ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென மீனவர்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.