தமிழ்நாடு

"கனமழைக்கு இதுவரை 4 பேர் உயிரிப்பு"- வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

நிவேதா ஜெகராஜா

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய அவர், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் முழுக்க பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும், அதனால் 9,10,11 தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுகப்பட்டு வருகின்றன.

தற்போதுவரை கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். மழைக்கு உயிரிழந்தவர்கள் மற்றும் கால்நடைகளுக்கு அரசு சார்பில் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.

 9-ம் தேதிக்குள் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. எண்ணூர், கூவம், அடையாறு உள்ளிட்ட முகத்துவாரங்கள் திறந்துவிடப்பட்டுள்ளது. ரேடார்கள் வேலை செய்ய தொடங்கி உள்ளது. இனி பிரச்சனை இல்லை. இந்த மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதாலேயே திடீர் சேதங்கள் ஏற்பட்டுவிட்டன. விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.