தமிழ்நாடு

கனமழையால் அருவிகளில் குளிக்க தொடர்கிறது தடை!

கனமழையால் அருவிகளில் குளிக்க தொடர்கிறது தடை!

webteam

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக தேனி மாவட்டம் கம்‌பம், சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க தொடர்ந்து 3-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை, கைவேவிஸ் உள்ளிட்ட வன பகுதிகளில் கன மழை பெய்துள்ளதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி பல மாதங்களாக நீர்வரத்து இன்றி காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த அருவியில் குளிக்க தடை விதித்துள்ளதாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

அதே போல் நாமக்கல் கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில் பெய்யும் கன மழையால் ஆகாய கங்கை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்குச் செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ‌140 அடி உயரத்தில் இருந்து நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஆபத்தான நிலைமை உள்ளதாகவும் , இந்தத் தடை சில நாட்கள் வரை நீடிக்கும் என்றும் ‌வனத்துறை கூறியுள்ளனர்.