தமிழ்நாடு

சென்னையில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடிமின்னலுடன் கனமழை இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

Sinekadhara

சென்னையில் இன்னும் இரண்டு மணிநேரத்திற்கு(இரவு 9.30 மணி நிலவரப்படி) இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சென்னை, புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. தென்தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாளை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னைக்கு அருகே கடலோர பகுதியில் இடிமழை மேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன. கிழக்கு திசை காற்றால் அவை நகரின் உட்புறம் நோக்கி நகர்ந்துவருகின்றன. இதன்காரணமாக அடுத்து இரண்டு மணிநேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை தொடர்ந்து வருவதையடுத்து நாளை(04-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.