RAIN ANI
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. இடி மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை!

சென்னையின் ஒருசில பகுதிகளில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Prakash J

வங்கக்கடல் வடக்கு அந்தமான் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும், கடலோரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Low Pressure Area) உருவாக அதிக வாய்ப்புள்ளது. இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தொடர்ந்து கடலில் நிலவும் சாதகமான சூழல் மற்றும் ஈரப்பதம் காரணமாக மேலும் வலுவடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைவதன் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று (செப்.18) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோன்று, நாளை (செப்.19) நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RAIN

செப். 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையின் ஒருசில பகுதிகளில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.