தமிழ்நாடு

இன்று மாலை புயலாக வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

JustinDurai
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
இதனிடையே, தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இன்று மாலை புயலாகி வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையை நெருங்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடற்பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், வங்கக்கடல், ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.