தமிழ்நாடு

பலத்த காற்றுடன் ‌‌கனமழை - வெள்ளத்தில் ‌சிக்கித்தவிக்கும் நீலகிரி!

பலத்த காற்றுடன் ‌‌கனமழை - வெள்ளத்தில் ‌சிக்கித்தவிக்கும் நீலகிரி!

webteam

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் சாலையில் இருந்த மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்தன. இதுமட்டுமன்றி நடுவட்டம், அவலாஞ்சி, குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் இருந்த 500 க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. மரங்கள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

இதனிடையே, உதகையில் மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரி‌‌ழந்தனர். எடக்காடு பகுதியில்‌ மீட்புப் பணியில் இருந்த காவலர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இருவர் காயமடைந்தனர். மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கூடலூர் பகுதியில் உள்ள முகாம்க்கு நேரில் சென்ற ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் மழை நீடிக்கலாம் என்பதால் தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரையோரம் ஆகிய இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது ”நீலகிரி பலத்த காற்று‌‌டன் கூடிய க‌‌னம‌ழையால் இடரைச் சந்தித்து வருகி‌றது. ‌நீலகிரி மா‌வட்டத்தில் கடந்த‌ 2 நாட்களுக்கு மேலாக பெய்யும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் மழை வெள்ளம் சூழந்த நிலையில், அங்குள்ள ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. வெளியேற முடியாமல் தவித்த அப்பகுதி மக்களை மீட்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்” என்றார்.