தமிழ்நாடு

3 தினங்களில் படிப்படியாக மழை குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

webteam

தமிழகத்தில்‌ கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 3 தினங்களில் படிப்படியாக மழை குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

மழை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரை வரை நிலவி வருகிறது. இதேபோல் மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் 27 சென்டி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 24 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று அவர் கூறினார். சென்னையில் தற்போது பருவமழை சராசரியை விட 93 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.