கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை pt web
தமிழ்நாடு

அதிகனமழை எச்சரிக்கை: நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

PT WEB

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை கடற்கரை பகுதியில் இருந்து சேவியர் காலனி குடியிருப்புப் பகுதி வரை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிக்கு சென்று வர முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய இரண்டு விமானங்கள் மதுரையிலேயே தரையிரக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மூலக்கரைபட்டியில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வெள்ள நீர் புகுந்தது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமமடைந்தனர். அஞ்சுகிராமம் சந்திப்பில் உள்ள கால்வாய் நிரம்பியதால் உபரி நீர் சாலையில் வெள்ளம் போல் ஓட ஆரம்பித்துள்ளது. தொடர் மழை காரணமாக பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய காரையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 143 அடியாக இருக்கும் நிலையில் நீர்மட்டம் 126 புள்ளி 5 அடியாக உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழை பெய்து வரும் பகுதிகளில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை

இந்நிலையில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாலும், சாலையில் தேங்கியுள்ள மழை நீர் காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டிள்ளதாலும், மாணவர்களின் நலன் கருதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.