தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், நேற்று மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத்தொடங்கி இன்று கரையை கடந்ததாக கூறப்பட்டது. இருந்தாலும் புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருப்பதாகவும், 24 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு வட மாவட்டங்களில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 10 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிதம்பரம் அண்ணாமலை, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபொழுது ஏற்பட்ட கடுமையான மழைபொழிவால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறையை அறிவித்துள்ளனர்.
அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி முதலிய 5 மாவட்டங்களுக்கும், பள்ளிகளுக்கு மட்டும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் முதலிய 5 மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரியிலும் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.