தமிழ்நாடு

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை - ஏரிகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு

rabiyas

சென்னைக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 7ஆம் தேதிக்கு பிறகு நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்படி வினாடிக்கு 250 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஏரியின் நீர் இருப்பு அதிகரித்து வந்ததாலும், சென்னையில் நாளை மீண்டும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 அடி நீர் மட்டம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 21 அடிக்கும் மேல் நீர் உள்ளது. அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்தும் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 2 ஆயிரம் அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.