தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 12மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
நாளை 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், புதுக்கோட்டையின் ஒரு சில பகுதிகளிலும், நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.