தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை

webteam

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பிவைக்கப் பட்டிருப்பதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிலைமையை சமாளிக்க மீட்புக் குழுக்கள், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மழை தொடர்பான உதவிகளுக்கு 1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா எண்களிலும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் அழைக்கலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.