வங்கக்கடலில் புதிதாகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிதாகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் இலங்கை கடற்கரையில் இருந்து தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது. அதேபோல், நவம்பர் 19ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்றுமுதல் நவம்பர் 18ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதன் காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.