தமிழ்நாடு

சென்னையில் காலை 9 மணி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

கலிலுல்லா

சென்னையில் காலை 9 மணி வரை மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு பெய்த கனமழை தற்போதுவரை நீடித்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

கிண்டி ஒலிம்பியா அருகே சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வடபழனி, அசோக் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 9 மணி வரை மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,சென்னை நுங்கம்பாக்கத்தில் காலை 5.30 மணி நிலவரப்படி 15.9 செ.மீ., மீனம்பாக்கத்தில் 6.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.